கரோனா வைரஸ் பரவல் காரணமாக உணவு டெலிவரி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய் குறைந்ததாலும், பல இடங்களில் டெலிவரி செய்தவர்கள் மூலமாக கரோனா வைரஸ் பரவியதாலும் மக்கள் ஆன்லைன் மூலம் உணவுப் பொருள்கள் வாங்குவதை வெகுவாகக் குறைத்து வருகின்றனர்.
இதனால் ஏராளமான இடங்களில் மிகப் பெரிய டெலிவரி கட்டமைப்பு, பணியாட்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்துவருகின்றன.
இந்த காரணத்தினால் ஸ்விக்கி நிறுவனமும் தனது தொழில் திட்டங்களை மாற்றியுள்ளது. நஷ்டம் ஏற்படும் இடங்களில் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கிளவுடு கிச்சன் திட்டங்களையும் தள்ளிவைத்துள்ளது. தற்போதைய சூழலில் மக்கள் அதிகளவு மளிகை பொருள்களை ஆர்டர் செய்வார்கள்.
இதன்மூலம் உணவு டெலிவரியால் ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஸ்விக்கி மளிகை சாமான் டெலிவரியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. உணவு டெலிவரி போல் இல்லாமல் மளிகைப் பொருள்கள் டெலிவரி செய்வது சற்று சவால் நிறைந்த பணியாக இருக்கும் என, தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.