2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி மென் பொறியாளர் சுவாதி, அலுவலகம் செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத ஒருவரால் ரயில் நிலையத்திலேயே சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்நிகழ்வு குறித்து முதற்கட்ட விசாரணை செய்த ரயில் நிலைய காவல்துறையினர், பின்னர் நுங்கம்பாக்கம் காவல்துறையினரிடம் வழக்கை ஒப்படைத்தனர்.
இதில் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் இருந்ததால், ரயில் நிலையம் அருகில் இருந்த வீடுகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதே பகுதியில் தங்கி வேலை செய்து வந்த, நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார், சுவாதியை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, மீனாட்சிபுரம் சென்ற காவல்துறையினர், இரவில் ராம்குமாரை கைது செய்ய முயற்சித்த போது, அவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சென்னைக்கு கொண்டுவரப்பட்டு விசாரணை முடிவில் ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.