சென்னை:நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொறியாளர் ஸ்வாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ராம்குமார் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
ஸ்வாதி கொலை வழக்கு
ராம்குமாரின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.
இந்த வழக்குத் தொடர்பாக கடந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிறைத்துறையினருக்கு சம்மன் அனுப்பி மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
மனித உரிமை ஆணையம் விசாரணை
அதன் அடிப்படையில் அவர்கள் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பிய நிலையில், சிறைத்துறை ஓய்வுபெற்ற எஸ்பி அன்பழகன், ஓய்வுபெற்ற ஜெயிலர் ஜெயராமன், உதயகுமார் உள்ளிட்டோர் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகினர்.
செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்கள் மேலும் மருத்துவர்கள் வேனு ஆனந்த், ஆண்டாள் ஆகியோரும் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிறைத்துறையினர் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இதனையடுத்து, வழக்கு விசாரணை அடுத்த மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.
வழக்கறிஞர்கள் பேட்டி
இது குறித்து சிறைத்துறையினர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவராம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராம்குமார் மரணத்தில் மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. சிறைத்துறை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சமர்பிக்கப்பட்டுள்ளது. அப்போது பணியிலிருந்த எட்டு சிறைத்துறை காவலர்கள், சாட்சியங்களாக இரண்டு மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர்.
குறிப்பாக பரமசிவம் ஆவணங்கள், சிறைவாசிகளிடம் என்ன நடந்தது என தீர விசாரிக்காமல் உள் நோக்கத்துடன் வழக்கை தொடர்ந்துள்ளதாக தங்களது தரப்பு வாதத்தை முன்வைத்தோம். இந்த வழக்கில் ராம்குமாரின் தந்தையான பரமசிவத்திடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுள்ளோம். அதனால் செப்டம்பர் 28ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதையடுத்து ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராம்குமார் மரணத்திற்கு தொடர்புடைய நபர்களுக்கு உரிய முறையில் தண்டனை வழங்க வேண்டும். ராம்குமார் உடலில் மின்சாரம் பாய்ந்ததற்கான எந்தவித தடயமும் இல்லை என இன்று (ஆகஸ்ட் 18) ஆஜராகிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோடநாடு கொலை வழக்கு: விசாரணையில் எடப்பாடி பழனிசாமி குறித்து சயான் பேசியதாகத் தகவல்