புதுச்சேரி வீரமாபட்டினம் கடல்சார் மீன்வள பாதுகாப்பு குழு அமைப்பின் செயற்குழு உறுப்பினர் சக்திவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் அவர், "புதுச்சேரியில் 25 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். அவர்கள் மாநில கடல் பகுதியில் படகுகள், நாட்டுப் படகுகளில் 15 கடல் மைல்கள் வரைச் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பலர் எந்திரப் படகுகளில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர். சுருக்குமடி வலையின் மூலம் பெரிய மீன்கள் மட்டுமல்லாமல், மீன் குஞ்சுகளும் பிடிக்கப்படுகின்றன. பலமுறை அவர்களது வலைகளில் டால்பின் மீன்கள், ஆமைகள் சிக்குவதும் உண்டு.
அதனால் மீன்வளம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்வி எழுப்பினால் மிரட்டல் விடுகிறார்கள். மீன் வளத்தை பாதுகாக்க தமிழ்நாடு மீன் வளத்துறை 2000ஆம் ஆண்டு சுருக்குமடி வலைகளை பயன்படுத்த தடை விதித்து ஆணை பிறப்பித்ததுள்ளது.
ஆனால், புதுச்சேரி அரசு இதுபோல எந்த ஒரு ஆணையையும் பிறப்பிக்கவில்லை. 2009ஆம் ஆண்டு புதுச்சேரி கடல் மீன்பிடி ஒழுங்குமுறை விதி கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த விதியை பெரிய படகுகளில் சென்று சுருக்குமடி வலைகளை பயன்படும் மீனவர்கள் கடைபிடிப்பதில்லை.