சென்னை: கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில், சென்னையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. இதனால் பருவக் கால பழங்கள், பழச்சாறுகள் விற்பனை அமோகமாக நடந்துவருகிறது. அந்த வகையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இளநீர், தர்பூசணி, வெள்ளரி, மோர், கரும்புச்சாறு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
பொதுவாக சென்னை வாசிகள் அந்நிய குளிர்பானங்களை விட பழச்சாறுகளை அதிகளவில் விரும்பி வாங்குவதால், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கோடை காலத்தில் நீர்ச்சத்து குறைப்பாட்டால் உடல்நல்கோளாறுகள் ஏற்படலாம். இதனை தவிர்க்க பழச்சாறுகளை குடிக்கலாம்.
இது குறித்து மதுரவாயலில் பழச்சாறு வாடிக்கையாளர் பிரிட்டோ கூறும்போது, "வெயில் காலத்தில் இயற்கையான பழங்கள் மற்றும் பழரசங்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நமது உடலில் வெயில் காலங்களில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகளை சரிசெய்ய முடியும். பழங்கள் மட்டுமல்லாமல், அதிக அளவிற்கு தண்ணீரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், சாப்ஃட் ட்ரிங்க்ஸ் என்று சொல்லக்கூடிய வெவ்வேறு வகையான குளிர்பானங்களை எடுத்துக்கொள்ளாமல், இயற்கையான பழச்சாறுகளை அருந்துவதே உடம்பிற்க்கு நல்லது. இயற்கையான பழங்கள் நாம் மட்டுமல்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகளும் லாபம் பெற்று பயனடைவார்கள் என்றார்.
இதே போல நுங்கம்பாக்கத்தில் தர்பூசணி வாடிக்கையாளர் லக்ஷ்மணன் கூறுகையில், "நான் வேளச்சேரியில் இருந்து நாள்தோறும் நுங்கம்பாக்கத்திற்கு வேலைக்காக வருகிறேன். வெயிலின் கொழுத்துவதால் தர்பூசணி, இளநீர் உள்ளிட்ட பழங்களை வாங்கி உட்கொள்கிறேன். சென்னையில் ஆங்காங்கே நிறைய கடைகள் உள்ளன. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாங்கிக்கொள்ள ஏதுவாக உள்ளது" என்றார்.