சென்னை:ராயப்பேட்டையில் உள்ள மோனகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மாநிலத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி , உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ் , மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்ட குழுவினர் கடந்த 6ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விடுதியில் உள்ள மாணவிகளுக்கான வசதிகள் மற்றும் குறைகளைக் கேட்டு அறிந்தனர். மேலும் விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் எந்தளவிற்கு உள்ளது என்பதையும், உணவு தயாரிக்கும் இடம், மாணவிகளின் கழிப்பறை உள்ளிட்டவற்றையும் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து சமூகப் பாதுகாப்புத்துறையும் ஆய்வினை மேற்கொண்டது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு ஆய்வறிக்கையை தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 9ஆம் தேதி அனுப்பி இருந்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்கோ தானுங்கோ தமிழ்நாடு தலைமைச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடிதம் எழுதி இருந்தார்.
அதில் மாணவிகளை 24 மணி நேரத்திற்குள் அங்கிருந்து பாதுகாப்பாக வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் எனவும்; இளம் சிறார் பாதுகாப்புச்சட்டத்தின் அடிப்படையில் தவறு செய்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தவறு செய்த பள்ளி நிர்வாகத்தின் மீது முதல் தகவல் அறிக்கை வழக்குப்பதிவு செய்து அதன் அறிக்கையை மூன்று நாட்களுக்குள் தங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஐஏஎஸ் அலுவலர் நேற்று (செப்டம்பர் 12ஆம் தேதி) மாணவிகள் விடுதியை ஆய்வு செய்தார்.
அதில் விடுதியில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும் எனவும், சிசிடிவியை இயக்கநிலைக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார். அதே நேரத்தில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்த குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என மறுத்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெயக்குமாரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, ஆய்வு செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத இல்லம் சம்பந்தப்பட்ட 85 பக்கம் கொண்ட அறிக்கையினை வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் கேஎஃப்சி பர்கரில் இருந்த கையுறையால் அதிர்ச்சி..