தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோரக்பூரில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேக்கு பணியமர்த்தும் நடவடிக்கை முறியடிப்பு - சு.வெங்கடேசன் நன்றி - madurai district

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேக்கு பணியமர்த்தும் பட்டியலை திருப்பி அனுப்பியதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சு. வெங்கடேசன் எம் பி
சு. வெங்கடேசன் எம் பி

By

Published : Oct 1, 2021, 11:43 AM IST

மதுரை: சென்னையில் தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து, உத்தரப் பிரதேசத்தில் தேர்வானோரை தெற்கு ரயில்வேயில் பணி நியமனம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

உத்தரப்பிரதேச கோரக்பூர் ரயில் ஓட்டுநர் தேர்வாளர்கள் பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டது. தனது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தெற்கு ரயில்வேயில் ஐம்பத்தி ஒரு ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு வடகிழக்கு ரயில்வேயின் கோரக்பூர் தேர்வாணையத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேர் பட்டியலை தெற்கு ரயில்வே கேட்டு வாங்கியது. அந்த பட்டியல் 24 .9. 2021 அன்று தெற்கு ரயில்வேக்கு அனுப்பப்பட்டது.

இந்த செயல் எந்த வகையிலும் நியாயமானதல்ல, இது நிறுத்தப்பட வேண்டும் என்று 25 .9. 2021 அன்று ரயில்வே அமைச்சருக்கும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் நான் கடிதம் எழுதினேன். தெற்கு ரயில்வே எனது கோரிக்கையை ஏற்று அந்த கோரக்பூர் தேர்வாளர் பட்டியலை 28-9-2021 அன்று திருப்பி அனுப்பியுள்ளது.

தெற்கு ரயில்வேயின் பொது மேலாளருக்கும் எனது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சு.வெங்கடேசன் நன்றி

அதே நேரத்தில் 51 காலியிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஆர்ஆர்பி சென்னை தேர்வானவர்களைத் தேர்வு செய்திட தெற்கு ரயில்வே பொது மேலாளரை கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே ஆர்ஆர்பி சென்னை இணையதளத்தில், அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் அதிகரிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்வு செய்யப்பட்ட அவர்களின் பட்டியல் 2022 வரை பணியமர்த்தலாம் என்றும் இணையதளத்தில் உள்ளது. எனவே தெற்கு ரயில்வே பொது மேலாளரை சென்னையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களையும் அந்த 51 காலியிடங்களில் நிரப்பிட கோருகிறேன்.

தேவைப்பட்டால் ரயில்வே அமைச்சரை இதில் தலையிடவும் அதற்கு அனுமதி வழங்கவும் கோருகிறேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் - சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details