சென்னை:தமிழ்நாட்டில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறந்து நடைபெற்று வருகின்றன.
சில மாவட்டங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு பின்னர் தொடங்குவது குறித்து அறிவிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இவ்வேளையில் கரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக் கல்வித்துறை கேட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பின் அது குறித்த விவரங்களை அரசுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 6ஆம் தேதி வரை பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.