பி.இ., பி,டெக். படிப்பில் சேர்வதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கி, 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 461 பொறியியல் கல்லூரிகளில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களில் 71 ஆயிரத்து 595 இடங்கள் மட்டுமே நிரம்பின.
இந்நிலையில், மாணவர்களிடையே எப்போதும் வரவேற்பு மிகுதியாக இருக்கும் மெக்கானிக்கல், சிவில் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்துள்ளது.
இது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியபோது, ”பொறியியல் மாணவர் சேர்க்கை நான்காவது சுற்று முடிவடைந்துள்ளது. இதில் மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங் படிப்புகளில் மாணவர்களிடையே ஆர்வம் மிகவும் குறைந்துள்ளது.
இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும், இந்தளவிலானது ஆச்சரியமாக உள்ளது. ஏரோநாட்டிக்கல், ஆட்டோமொபைல், புரொடக்ஷன் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களிலும் மாணவர்கள் ஆர்வம் குறைந்துள்ளது.
மெக்கானிக்கல்லில் 301 கல்லூரிகளில் பொதுப்பிரிவு இடங்களில் மாணவர்கள் சேரவில்லை. அதேபோல 250-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சிவில் பொதுப்பிரிவு இடங்கள் காலியாகவே உள்ளன. கடந்த காலத்தில் முன்னிலையில் இருந்த படிப்புகள் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளன.
மெக்கானிக்கல் பிரிவில் 12 தனியார் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே முழு இடங்களும் நிரம்பியுள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மெக்கானிக்கல், சிவில் இடங்கள் கணிசமாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.
மெக்கானிக்கல், சிவில் - மாணவர்களிடம் குறைந்தது ஆர்வம்! இந்த ஆண்டு ஈசிஇ, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. ஆகிய பாடப்பிரிவுகளை மாணவர்கள் அதிகம் விரும்பியுள்ளனர். இதற்கு வேலை வாய்ப்பும், வருமானமும் முக்கியக் காரணமாகும்.
மெக்கானிக்கல், சிவில் படித்து முடித்தோருக்கு குறைந்த அளவு ஊதியம் கிடைப்பதும், மாணவர் சேர்க்கை குறைய காரணம். இருப்பினும் இத்துறைகளில் மாணவர்கள் தங்கள் திறன்களை அதிகப்படுத்திக் கொண்டால் வேலைவாய்ப்பு கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது“ என்றார்.
இதையும் படிங்க: '7.5% இடஒதுக்கீடு விவகாரம்... கையெழுத்திட பேனா இல்லையா ஆளுநரே?'