தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 17, 2021, 5:08 PM IST

ETV Bharat / city

மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது - அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்

மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

சென்னை: மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என எந்தத் தனியார் பள்ளியும் கட்டாயப்படுத்தக் கூடாது எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "பள்ளிக்கு மாணவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகள் மூலமாக வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நிதி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் சுமார் மூன்று லட்சம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். கரோனா காலகட்டத்தில் அவர்கள் போதிய வருமானம் இல்லாமல் தவித்துவருவதாகப் பள்ளிக் கல்வித் துறைக்குத் தொடர்ந்து தகவல் வருகிறது.

தனியார் பள்ளி நிர்வாகங்கள் அவர்களின் ஆசிரியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க தொடர்ந்து அறிவுறுத்திவருகிறோம். பள்ளிக் கல்வித் துறையின் அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளோம்.

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தும்போது, இது தொடர்பாக ஆலோசனை செய்து உரிய முடிவை முதலமைச்சரே அறிவிப்பார்.

அரசுப் பள்ளிகளில் பொதுவாக தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் அதிக ஆசிரியர்களும், வட மாவட்ட பள்ளிகளில் குறைவான ஆசிரியர்களும் உள்ளனர். எனவே வட மாவட்டங்களில் பணியாற்ற தென்மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறோம்.

எனவே பணி நிரவல் கலந்தாய்வின்போது இவற்றைச் சரி செய்யக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என எந்தத் தனியார் பள்ளியும் கட்டாயப்படுத்தக் கூடாது" என்றார்.

இதையும் படிங்க: ஒவ்வொருவருக்கும் 1 கிலோ மீன்கள் இலவசம் - மோடி பிறந்த நாள் ஸ்பெஷல்!

ABOUT THE AUTHOR

...view details