தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்பில் சேர 27 ஆயிரத்து 164 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர 16 ஆயிரத்து 597 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த நவம்பர் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நாள்தோறும் 500 மாணவர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், இன்று (டிச. 8) நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்க 594 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் 502 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். 92 மாணவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு வரவில்லை.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த எம்பிபிஎஸ். இடங்கள் பொதுப்பிரிவு, பி.சி., பி.சி. முஸ்லிம்.,எம்.பி.சி., ஆகிய பிரிவுகளால் நிரம்பப்பட்டதால் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வில் மீண்டும் கலந்துகொள்ள தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக காத்திருப்பு பட்டியலை அதிகளவில் தேர்வு செய்துள்ளனர்.