நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மருத்துவக் கலந்தாய்வு நேற்று மீண்டும் தொடங்கியது. 390 பேர் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 8 மாணவர்கள் தவிர, 382 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். அதில் 381 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மீதமுள்ள ஒரு மாணவர் நிலை என்ன என்பதை மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவிக்கவில்லை.
இருந்தபோதிலும் அந்த மாணவர் இருப்பிடச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக கலந்தாய்வில் இருந்து வெளியேற்றப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அனைத்து சான்றிதழ்களையும் முழுமையாக ஆய்வு செய்த பிறகு அந்த மாணவர் கலந்தாய்வில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இருப்பிடச் சான்றிதழ் பெறுவதில் மிகப்பெரும் மோசடி நடைபெறுவதாகவும், வேறு மாநிலங்களிலிருந்து இங்கேயும் கலந்தாய்வில் பங்கேற்பதாகவும் சர்ச்சைகள் எழுந்த நிலையில், இந்நிகழ்வு நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.