பொதுவாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றாலும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ள அரசு அமைப்புகள் செயல்பட்டே ஆக வேண்டும் என்பது எதார்த்தமான ஒன்று. அவ்வாறு பணியாற்றும் துறைகளில் மின்சார வாரியம் மிக முக்கிய பங்காற்றுகிறது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின்போது மின் ஊழியர்கள் எப்போதும்போல் பணியாற்றுகின்றனர். குறிப்பாக, மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றுபவர்களுக்கு கஜா, ஒக்கி, தானே புயல்கள் மற்றும் கரோனா தடுப்பு ஊரடங்கு என எந்த விதி விலக்கும் இல்லை.
பணியில்லாத காலங்களில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு தினசரி 350 ரூபாயை மின்வாரியத் துறை 2018ஆம் ஆண்டு போட்ட ஒப்பந்தப்படி ஊதியம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் முதலமைச்சரால் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஏதேனும் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் சென்னை மாநகர் மட்டுமல்லாது மாநிலம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான மின் வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் காத்திருக்கின்றனர்.