சென்னை:கடந்த 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 ராணுவ உயர் அலுவலர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
உலகையே உலுக்கிய இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக ஹெலிகாப்டர் விபத்து குறித்த பல்வேறு சர்ச்சைக்குரிய, அவதூறான, உண்மைக்குப் புறம்பான கருத்துகள் பலரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாகக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று விபத்திற்கான உண்மையான காரணம் அறியும்வரை உயிரிழந்த வீரர்களின் மரியாதை கருதி தேவையற்ற வதந்திகள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் விமானப்படை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.