தூத்துக்குடி:சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையிலும், அவர்களது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (ஆக. 20) ஒண்டிவீரன் நினைவு தபால் தலை மத்திய அரசு மூலமாக வெளியிடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று (ஆக. 19) தூத்துக்குடி விமானநிலையம் வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,"நம் இந்தியா சுதந்திரம் அடைந்து 100ஆவது ஆண்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 100ஆவது சுதந்திர தினத்தில் இந்தியா போற்றப்படக்கூடிய நாடாகவும், வளர்ச்சி அடைந்த நாடாகவும், அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க கூடிய நாடாகவும் இருக்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இந்த ஆசாதி அம்ருத் மகா உற்சவத்தின் ஒரு பகுதியாக, அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் நிலை குறித்து, தமிழ்நாட்டில் குறிப்பாக, வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், வேலுநாச்சியார் அவர்களுடைய கதையை நாம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருக்கிறோம்.
நாளை (அதாவது இன்று), ஒரு மிக முக்கியமான நாளாக, வீரன் ஒண்டிவீரன் அவர்களின் 251ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவருடைய நினைவு தினத்தை போற்றும் விதமாகவும், அவருடைய வீரத்தை அங்கீகரிக்கும் விதமாகவும் மத்திய அரசாங்கத்தின் சார்பில் திருநெல்வேலியில் அவரின் தபால் தலை வெளியிட இருக்கிறது.
தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி வெளியிட, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செவுந்தரராஜன் பெற்றுக் கொள்ள இருக்கிறார். மேலும், பி வோஸ் என்று சொல்லக்கூடிய மாஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சார்பில் அறியப்படாத ஹீரோஸ் என்ற தலைப்பில் பத்து நாள்கள் நடைபெறக் கூடிய கண்காட்சியை நடத்த திருநெல்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.