தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அனுமதி அளிக்கப்படாத நிலையில் கிராமசபை கூட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை' - தமிழ்நாடு அரசு

சென்னை: அரசு அனுமதி அளிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் கிராம சபை கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

By

Published : Dec 25, 2020, 2:08 AM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994இன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வாக்களிக்கும் உரிமை கொண்ட மக்களை உள்ளடக்கி கிராம சபை அமைக்கப்பட்டுள்ளது. கிராம சபை என்பது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி அமைக்கப்படும் ஒரு நிர்வாக அமைப்பாகும். இக்கிராம சபைகள் அந்த ஊராட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவை. கிராம சபைகள் செயல்படும் முறைகள் குறித்த விரிவான விதிமுறைகள் அரசால் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் குறைந்தபட்சம் நான்கு முறை அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, அக்டோபர் 2 ஆகிய நாட்களில் நடத்த அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தில் மிக முக்கிய பங்காற்றும் கிராம சபைகள், ஊரக பகுதி மக்களின் குறைகளை களைந்து கிராமம் முன்னேற்றம் காண வழிவகை செய்கிறது. இத்தகைய கிராம சபைகள் அரசியல் சார்பற்றவை. இந்நிலையில், சில அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் மக்களை குழப்புவதற்காக அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன.

இது ஊராட்சி சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது மட்டும் அல்லாமல் அந்த அமைப்பை இந்நடவடிக்கை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது. கிராம சபை என்பது அரசமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பாகும். மேற்படி ஊராட்சி சட்டத்தின் பிரிவு 3 ( 2 - A ) இன்படி கிராம சபையை கூட்டும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு மட்டுமே உள்ளது. அவர் கிராம சபையை கூட்ட தவறும்பட்சத்தில், ஊராட்சிகளின் ஆய்வாளர், மாவட்ட ஆட்சியர் கிராம சபை கூட்டத்தை கூட்ட வேண்டும்.

எனவே, மேற்படி சட்டத்தால் அதிகாரம் பெற்றவர்களை தவிர, கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தனி நபரோ அல்லது அரசியல் கட்சிகளோ கூட்டங்களை கூட்டுவது சட்டத்துக்கு எதிரானது. இச்சட்டத்தை மீறுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 - இன்கீழ் கிராம சபைகளைக் கூட்ட முடிவு எடுக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசியலில் ஆதாயம் தேடுவதற்காக கிராம சபை என்ற பெயரில் அரசியல் கட்சி அல்லது தனி நபர் கூட்டங்களை நடத்துவது பொதுமக்களை பெரும் குழப்பத்துக்கு உள்ளாக்கும் என்பதால் இத்தகைய நடவடிக்கைகளை ஆட்சியர்கள் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அரசால் அனுமதிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி இது போன்ற அரசியல் பொதுக் கூட்டம் கூட்டினால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details