சென்னை:கந்துவட்டி கொடுமை காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் பெற்றோர் தீக்குளித்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதனையடுத்து, கந்துவட்டி வசூலிக்கும் நபர்களைக் கண்டறிந்து போலீசார் கைது செய்து வந்தனர்.
இந்த நிலையில், மீண்டும் கந்துவட்டி கொடுமை தலை தூக்கியுள்ளது. சமீபத்தில் கடலூரில் கந்துவட்டிக் கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் செல்வகுமார் என்பவர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரத்தில், ரூ.5 லட்சம் வாங்கிய காவலரிடம் வட்டி சேர்த்து ரூ.12 லட்சமாகக் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டு வருகிறது.
ஆப்ரேஷன் கந்து வட்டி: தமிழ்நாடு காவல் துறையில், கந்துவட்டி கொடுமைகளைத் தடுக்க "ஆப்ரேஷன் கந்து வட்டி" (Operation Kandhu Vatti) என்ற சிறப்பு இயக்கத்தை நேற்று (ஜூன் 8) தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கினார். அதன்படி, காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார்களை உடனடியாக எடுத்து, சட்ட ஆலோசனைக்கு அனுப்பி, அதன் பின்பு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் உத்தரவுபெற்று கந்துவட்டி வசூலிக்கும் அலுவலகத்தை சோதனை செய்து, வழக்குத் தொடர்பான ஆவணங்கள், காசோலைகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி பேட்டி தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களாக தலைதூக்கும் கந்து வட்டி கொடுமைகளும்; அதனால், கடன் பெற்றவர்கள் செய்வதறியாமல் எடுக்கும் விபரீத முடிவுகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதனைத்தடுக்கும் விதமாக தமிழ்நாடு காவல் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி, நமது ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.
50 வழக்குகள் பதிவு: அந்தப் பேட்டியில் அவர், 'ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி, ஆன்லைன் லோன் செயலி மூலம் பெறும் வட்டி என அனைத்துமே கந்துவட்டிக்குள் அடங்கும். சென்னை மத்திய குற்றப்பிரிவில் உதவி ஆணையர் தலைமையில் கந்துவட்டி தடுப்புப்பிரிவு செயல்பட்டு வருகிறது. அரசு நிர்ணயித்த வட்டி விகிதத்தைவிட அதிகளவில் கந்துவட்டியில் ஈடுபட்டதாக இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்துள்ளோம்.
குண்டர் சட்டம் பாயும்:இதில், முக்கிய குற்றவாளிகளான பல பேரை குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்துள்ளோம். ஆன்லைன் லோன் செயலியில் பொதுமக்கள் அதிகமான வட்டியை செலுத்த முடியாத நிலை ஏற்படுவதால், புகைப்படங்களை மார்ஃபிங் செய்து ஆபாசமாக, அவர்களது உறவினர்களுக்கு அனுப்புகின்றனர்.
கந்துவட்டி தொடர்பான புகார்களை பொதுமக்கள் காவல் உதவி செயலி மூலமாகவும், ஆன்லைன் லோன் ஆப் கந்துவட்டி புகார்களை 1930 என்ற எண்ணிற்கும், 100 என்ற எண் மூலமாகவும் தெரிவிக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Online loan Fraud: 3 மாதத்தில் ரூ.11 கோடி வரை மோசடி; புனே சென்று 4 பேரை தூக்கிய தேனி போலீஸ்!