தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிலை கடத்தல்காரர்களின் சிம்ம சொப்பனனாக உள்ள சிங்கை வாழ் தமிழன் விஜய் குமார்! - விஜய் குமார்

இந்தியாவில் சுற்றுலா பயணிகள் போல கோயில் சிலைகளை நோட்டமிட்டு திருடி பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட 200 சிலைகளை அயல் நாட்டிலிருந்து மீட்டுகொடுத்த சிங்கப்பூர் தமிழன் விஜய் குமார் என்ன சொல்கிறார் என்பதை கேட்டு தெரிந்து கொள்வோம்.

விஜய் குமார்
விஜய் குமார்

By

Published : Oct 14, 2021, 11:10 PM IST

Updated : Oct 15, 2021, 1:01 PM IST

சென்னை: இந்தியாவில் கோயில், அருங்காட்சியகங்களில் இருந்த பழங்கால சிலைகள், புராதன பொருட்கள் திருடப்பட்டு பல நாடுகளில் காட்சி பொருளாகவும், பல கோடி ரூபாய்க்கு விற்கபட்டும் வருகிறது.

திருடப்பட்ட சிலைகளை பல நாடுகளிலிருந்து சிலை கடத்தல் தடுப்புபிரிவு காவல் துறையினரும், ஒன்றிய அரசும் இணைந்து மீட்டு வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் இருந்து, 157 பழமைவாய்ந்த தொல்லியல் பொருட்களை மீட்டு கொண்டு வந்தார்.

குறிப்பாக அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10ஆம் நூற்றாண்டில் உள்ள நடராஜர் சிலை, 12ஆம் நூற்றாண்டின் 24 தீர்த்தங்காஸ், ரேவண்டா, 56 டெரகோட்டா சிலைகள், 71 கலாச்சார பொருட்கள், 60 இந்து மத சிலைகள், 16 புத்த மத சிலைகள், 9 சமணசமய சிலைகள் ஆகியவை கொண்டு வரப்பட்டன.

இப்படி இந்தியாவில் இருந்து திருடப்பட்ட சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு உதவிய நபர் சிங்கப்பூரில் வாழும் தமிழரான எஸ். விஜய் குமார்.

யார் இந்த விஜய்குமார்?

விழுப்புரம் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டு சென்னையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சிங்கப்பூரில் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார் விஜய் குமார்.

பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்கும் போது கலைப்பொருட்கள் மீது ஆர்வம் ஏற்பட்டதாகவும், இதனால் கலைப்பொருட்களை பார்க்க பல கோயில்களுக்கு சென்றதாக தெரிவிக்கிறார் விஜய் குமார்.

இச்சூழலில், கோயில்களில் கலைப்பொருட்கள் திருடப்பட்டு பல நாடுகளில் விற்கப்பட்டுவதை அறிந்த விஜய்குமார், தாய் நாட்டிற்குச் சொந்தமான கலைப்பொருட்களை மீட்க கடந்த 2014ஆம் ஆண்டு "இந்தியா பிரைடு பிராஜெக்ட்" என்ற தன்னார்வ அமைப்பை தொடங்கினார்.

சிலைகளை மீட்க தன்னார்வ அமைப்பு

குறிப்பாக இந்தியாவில் கடந்த 1970-2000 ஆம் ஆண்டு வரை 19 சிலைகளும், 2000 - 2012 ஆண்டில் எந்த சிலைகளும் மீட்கவில்லை என தரவுகள் தெரிவிப்பதால் கலைப்பொருட்களின் திருட்டு குறித்து இந்திய அரசு பெரிய கவனம் செலுத்தாமல் இருந்ததாகக் கூறும் அவர், இதனால் இந்திய சிலைகள் திருடுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததாக தெரிவிக்கிறார்.

தொடர்ந்து பேசிய விஜய குமார், "1930ஆம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் சிலைகள் திருடப்பட்டு வருகிறது. தரகர்கள் வெளிநாட்டிலிருந்து சுற்றுலா பயணிகள் போல் அனைத்து கோயில்களுக்கும் சென்று தேவைப்படும் சிலைகளை புகைப்படம் எடுத்து சென்று, பின்பு சிலைகளை கடத்திச் செல்கின்றனர்.

எப்படி கடத்தப்படுகிறது

குறிப்பாக நிஜ சிலையை போல போலியாக தயாரித்து அந்த ஆவணங்களை காண்பித்து போலி சான்றிதழ் பெற்று நிஜ சிலைகளை கண்டெய்னர் மூலமாகவும், சுடுமண் சிற்பங்களை விமானம், கப்பல், கொரியர் மூலமாக வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கின்றனர்.

திருடப்பட்ட இந்திய கலைபொருட்களை செல்வந்தர்கள் வெளிநாடுகளில் நீச்சல் குளம், குளியலறை போன்ற இடங்களில் வைத்திருக்கின்றனர். கறுப்பு பணத்தை மறைக்க சிலைகளாகவும் வாங்கி வைத்திருக்கின்றனர்.

2012ஆம் ஆண்டு நியூயார்க்கில் கைது செய்யப்பட்ட சிலை கடத்தல் மன்னனான சுபாஷ் கபூர் அருங்காட்சியகத்தில் இருந்து 900 கோடி மதிப்பிலான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவரளித்த தகவலின் பேரிலேயே பல இடைதரகர்கள் கைதுசெய்யப்பட்டனர். இது தொடர்பாக 'சிலை திருடன்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன்.

போலி சிலைகளை ஒப்படைக்கும் நாடுகள்

தஞ்சாவூர் நடராஜர் சிலை, புன்னை நல்லூர் கோயிலில் இருந்து காணாமல் போனதாக 1971ஆம் ஆண்டு கோயில் நிர்வாகம் புகார் அளித்தபோது, வேறு சிலை கொடுத்து வழக்கை முடித்துவைத்ததாக தகவல் கிடைத்தது. புகைப்படத்தை வைத்து திருடப்பட்ட நடராஜா சிலை நியூயார்க் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது.

இதேபோல் அமெரிக்காவில் 248 சிலைகள் கண்டறிந்து தகவல் கொடுத்துள்ளோம். ஆனால், 157 சிலைகள் மட்டுமே தற்போது வந்துள்ளது. மீதமுள்ள சிலைகள் விரைவில் இந்தியாவிற்கு வந்தடையும் என எதிர்பார்க்கிறேன். இந்தியாவில் ஆண்டுக்கு ஆயிரம் பெரிய சிலைகள் கடத்தப்படுகிறது. அதில் 100க்கு 5 சிலை திருட்டு குறித்த புகார் மட்டுமே வெளிச்சத்துக்கு வருகிறது" என வருத்தம் தெரிவிக்கிறார் விஜயகுமார்.

சிலை கடத்தல் ஆய்வாளர் விஜய் குமார் பேட்டி

சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்

பிற நாடுகளை போல், இந்தியாவில் சிலை கடத்தலுக்கு கடுமையான தண்டனை இல்லை எனவும் 380(c) 7 வருடம், 3000 அபராதம் மட்டுமே என்பதால் மீண்டும் சிலை கடத்தலில் பலர் ஈடுபடுவதாக விஜய் குமார் குற்றஞ்சாட்டினார்.

கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் திருடுபோன 200 சிலைகள் குறித்தான தகவலை வழங்கி மீட்டு கொடுத்ததாகவும், தொன்மை வாய்ந்த கலைப்பொருட்களை அழிக்காமல் பாதுகாப்பது நமது கடமை என்று கூறும் அவர், தொடர்ந்து தாய் நாட்டிற்கு சொந்தமான சிலைகளை மீட்டு கொடுப்பேன் என எந்த அலட்டலும் இல்லாமல் கூறினார் விஜய் குமார்.

Last Updated : Oct 15, 2021, 1:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details