சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 23 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
குறைந்தபட்சம் எட்டு விழுக்காடு கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் சுங்கக்கட்டணத்தைத் தொடர்ந்து உயர்த்துவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடிகளைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
அனைத்தையும் நிலைகுலையச் செய்த கரோனா
தமிழ்நாட்டிலுள்ள 48 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அவை தவிர்த்து மீதமுள்ள விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம் உள்ளிட்ட 24 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுங்கக் கட்டண உயர்வு ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கமான ஒன்று தான்; இதில் புதிதாக எதுவும் இல்லை என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது. இது மக்களின் மனநிலை, நாடும் நாட்டு மக்களும் எதிர்கொண்டு வரும் சூழல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாத கருத்து ஆகும்.
கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசின் பொருளாதாரம் முதல் அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலை வரை அனைத்தையும் நிலை குலையச் செய்திருக்கிறது. நெடுஞ்சாலை சுங்கக்கட்டண உயர்வு என்பது மகிழுந்தில் பயணிக்கும் பணக்காரர்களை மட்டும்தான் பாதிக்கும் என்று கருதக் கூடாது.
பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்
சரக்குந்துகளுக்கு கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும்போது, அதன் விளைவாக அத்தியாவசியப் பொருள்களின் விலை கண்டிப்பாக உயரும். பேருந்துகளுக்கான சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் போது தனியார் பேருந்துகளின் கட்டணம் உடனடியாகவும், அரசு பேருந்துகளின் கட்டணம் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகும் உயர்த்தப்படும்.
இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அந்த வகையில் சுங்கக்கட்டண உயர்வு என்பது அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் நடவடிக்கையாகும். அப்படிப்பட்ட செயலை பொருளாதார சூழல், மக்களின் வாழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு செய்யக்கூடாது.
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் அல்லது அதற்காக செய்யப்பட்ட முதலீடு திரும்ப எடுக்கப்படும் வரை மட்டுமே முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்; அதன்பின்னர் பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்பதுதான் விதியாகும்.
ஏற்க முடியாத காரணங்களும் கட்டண வசூலிப்பும்