சென்னை:கும்பகோணம், தண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் கடந்த 1971ஆம் ஆண்டு கோவில் பூட்டு உடைக்கப்பட்டு பார்வதி சிலை, சம்பந்தர் சிலை, கிருஷ்ண கலிங்க நர்த்தனம் சிலை, அகஸ்தியர் சிலை, அய்யனார் சிலை ஆகிய 5 உலோக சிலைகள் திருடப்பட்டதாக கடந்த 2019 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கே.வாசு என்பவர் புகார் அளித்தார்.
மேலும் கடந்த 52 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இந்த சிலைகள் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், உடனடியாக கண்டுபிடிக்கக்கோரி அவர் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியங்கள் மற்றும் ஏல மையங்களில் தேடி வந்தனர்.
மேலும், திருடுபோன சிலைகளின் புகைப்படங்கள் ஏல மையங்களின் வலைதளத்தில் உள்ள சிலைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.
விசாரணையில் அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டீஸ் ஏல மையத்தின் வலைதளத்தில் நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் திருடுபோன சம்பந்தர் சிலையின் புகைப்படம் இருப்பதை கண்டுபிடித்த சிலைகடத்தல் தடுப்புப் பிரிவினர், தங்களிடம் உள்ள சிலையின் புகைப்படத்துடன் அதை ஒப்பிட்டு பார்த்தபோது அது நடனபுரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட 34.3 செ.மீ உயரம் கொண்ட சம்மந்தர் சிலை என்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் உறுதி செய்தனர்.