தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொழிற்சாலைகளை மூட நீதிமன்றம்தான் உத்தரவிட முடியும்: வேதாந்தா நிறுவனம் - ஸ்டெர்லைட் நிறுவனம்

சென்னை: மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடும்படி நீதிமன்றம்தான் உத்தரவிட முடியும் என ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஸ்டெர்லைட்
ஸ்டெர்லைட்

By

Published : Dec 16, 2019, 8:14 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகள் மூன்று மாத இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில், ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், தொழிற்சாலைகள் மாசு ஏற்படுத்தியதாகக் கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட ஆலைகளை மூட நீதிமன்றம்தான் உத்தரவிட முடியும் என வாதிட்டார்.

ஆலையில் ஏற்பட்டுள்ள மாசுவை அப்புறப்படுத்த அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல், உள்நோக்கத்துடன் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் மூத்த வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

மேலும், ஆலையை பராமரிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் கோரியபோது, அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது எனக் கூறிய மூத்த வழக்கறிஞர், காலாவதியான அறிக்கைகளின் அடிப்படையில் அரசுத்தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன என்றார்.

தொடர்ந்து வாதாடிய அவர், மாசு ஏற்படுத்தியது தொடர்பாக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களைக் கேட்டால், 1997, 2002, 2004ஆம் ஆண்டுகளின் அறிக்கைகளை அரசுத் தரப்பு சுட்டிக்காட்டுவதாக தெரிவித்தார். மேலும், அரசின் இந்த வாதங்களை 2013ஆம் ஆண்டுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் பரிசீலித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த பழைய வாதங்களை இன்று ஏற்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி, முந்தைய காலத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தவறுகளுக்காக தற்போது ஸ்டெர்லைட் நிறுவனத்தை குற்றவாளியாக்க முடியாது எனவும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆலையை இயக்க ஒப்புதல் வழங்கலாம் என்றும் 2018 பிப்ரவரியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.

ஆனால் ஏப்ரல் மாதத்தில் ஆலையை இயக்க அனுமதி மறுத்துள்ளதாக வாதிட்டார். இந்த வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details