தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கோயில்களின் பெயர்கள்; சமஸ்கிருதத்துடன் தமிழும் இடம்பெற நடவடிக்கை'

கோயில்களில் சமஸ்கிருத பெயர்களுடன் தமிழ்ப் பெயர்களும் சேர்ந்து இடம்பெற முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சேகர்பாபு
சேகர்பாபு

By

Published : Oct 7, 2021, 11:47 AM IST

சென்னை:அமைச்சர் சேகர்பாபு சென்னை புரசைவாக்கம் கங்காதேசுவரர் கோயிலில் ஆய்வுமேற்கொண்டார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய சேகர்பாபு,

"சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதேசுவரர் திருக்கோயிலில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். 15 லட்சம் ரூபாய் செலவில் திருத்தேர் மேம்படுத்தப்படும், நல்ல வடிவமைப்பில் மரத்தேர் செய்வதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விரைவில் பணிகள் தொடங்கும். சிதிலமடைந்த வாகனங்கள் புதுப்பிக்கப்படும்.

சமஸ்கிருதத்துடன் தமிழும்...!

24 கோடி ரூபாய் குளத்திற்குச் செலவிடப்பட்டதாக வெளியான செய்தி தவறானது; குளத்தைச் சீரமைக்க நிதி ஒதுக்கவில்லை. மேலும் கோயிலின் குளம் சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்படும். கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்கப்படும், நிலுவையில் உள்ள வாடகைத் தொகை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தமிழ்நாட்டில் உள்ள சில கோயில்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் உள்ளது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேள்வியெழுப்பியதற்கு, "இதுபோன்ற வேண்டுகோள்கள் பல இடங்களிலிருந்து வருகின்றன. சில கோயில்கள் தமிழ், சமஸ்கிருத பெயர்களில் உள்ளன. இது குறித்து தீர ஆய்வுசெய்து, முதலமைச்சர் அனுமதியுடன் இரண்டு பெயர்களிலும் கோயில்களின் பெயர்கள் அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பதிலளித்தார்.

துறை சார்பில் திறக்கப்படும் பள்ளிகள் குறித்து அவர் பேசுகையில், "இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஐந்து கல்லூரிகள் இயங்கிவருகின்றன. புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளோம். இதில் நான்கு கல்லூரிகளுக்கு உயர் கல்வித் துறையிடம் அனுமதி பெற்றுள்ளோம்.

வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோயில்கள் திறக்க நடவடிக்கை

இந்தக் கல்லூரிகளை இந்த ஆண்டு திறக்கவுள்ளோம். தனியார் கட்டடத்தில் அனுமதி பெற்று வாடகையில் கல்லூரியை நடத்த உள்ளோம். சென்னை இரண்டு இடங்களில் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்துள்ளோம். சென்னை கொளத்தூரில் கல்லூரி தொடங்க பூம்புகார் நகரில் இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தொடங்கப்படும் கல்லூரிகளில்
ஆன்மிகம் சார்ந்த பாடமும் நடத்தப்படும். சென்னையில் இருக்கின்ற தனியார் கல்லூரிகளுடன் போட்டிபோடும் விதத்தில் இந்தக் கல்லூரிகள் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

கோயில் திறப்பு குறித்து பாஜகவின் போராட்டம் குறித்து சேகர்பாபு, "ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படியே கோயில்கள் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மூடப்பட்டுள்ளன. கரோனா தொற்று முழுமையாகக் குறைந்த பிறகு, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில் திறப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். போராட வலுவான காரணம் இல்லாததால் பாஜகவினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

நன்கொடை அளிக்க இணையதளம்

இன்று காளிகாம்பாள் கோயிலில் பாஜக போராட்டம் நடத்துவதால் இன்று ஒருநாள் பக்தர்களின் வழிபாடு பாதிக்கப்படும். ஏற்கனவே நான்கு நாள்கள் கோயில்கள் திறந்துள்ள நிலையில், பாஜகவின் போராட்டத்தால் மூன்று நாள்கள் ஆகியுள்ளது. பாஜகவினர் போராடுவதற்கு காரணம் தேடுகிறார்கள்" என விளக்கம் அளித்தார்.

மேலும் அவர், "தரகர்கள் மூலம் பணம் வசூலிக்கும் முறையை ஒழித்து முறைப்படுத்தப்படும். கோயில்களுக்குப் பக்தர்கள் நன்கொடை அளிக்க இணையதளம் தொடங்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் அதிகளவில் வருவதால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசனை செய்து செவ்வாய்க்கிழமை கோயில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பூசாரிகளுக்கு உதவித்தொகை கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்

கிராமப்புறங்களில் உள்ள கோயில்களுக்கு திருத்திய வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் அறிவித்த 130 கோடி ரூபாய் தொகை, கோயில் திருப்பணிகளுக்குச் செலவழிக்கப்படும். மேலும் 12 ஆயிரத்து 200 கோயில் பூசாரிகளுக்கும் ஊக்கத்தொகை சரிவர கிடைப்பது குறித்து உறுதிப்படுத்தப்படும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: செய்தியாளர் மீது திமுக பிரமுகர் உள்ளிட்டோர் தாக்குதல்: ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details