திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணிகள் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுவருகிறது.
இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் நோக்கிலும் அதை தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியவும் மத்திய நீர்வள அமைச்சகம் 2009ஆம் ஆண்டு குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவினர் ஆழ்துளைக் கிணறுகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், விபத்து நடைபெறாமல் தடுப்பது குறித்த நடவடிக்கை பற்றியும் பரிசீலித்தது. பின்னர் இந்தக் குழு மத்திய மாநில அரசுகள் ஆழ்துளை விபத்துகளைத் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உருவாக்கியது.
மத்திய அமைச்சகம் போன்று உச்ச நீதிமன்றமும் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவதை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இரண்டு முறை அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு 2010 பிப்ரவரி 11, ஆகஸ்ட் 6 ஆகிய இரண்டு தேதிகளில் வெளியிடப்பட்டது. அந்த உத்தரவில் உள்ளனவற்றை பின்பற்றுமாறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.