சென்னை: கரோனா ஊரடங்கு காலத்தில் நடந்த ஆன்லைன் வகுப்பின்போது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியரான ராஜகோபாலன் மீது அசோக்நகர் போலீசார் 8 போக்சோ வழக்குகளைப் பதிவு செய்தனர். போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த 8 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கக்கூடாது என்றும், தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என்றும் ராஜகோபாலன் தாக்கல் செய்த மனுவை, போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து ராஜகோபாலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், 8 வழக்குகளில் 5 வழக்குகள், ஐந்து ஆண்டுகள் தாமதமாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், போக்சோ சட்டப்பிரிவு 12இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்ச தண்டனையே 3 ஆண்டுகள்தான். அதனால், இந்த 8 வழக்குகளையும் தனித்தனி வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.