சென்னை:தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் சில்லறை மதுபானக்கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில், தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலிப்பாட்டில்களை சேகரிப்பதற்கான புதிய டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்குப் பதிலாக பழைய டெண்டரை நீட்டிக்க வேண்டும்; நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றை கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளுடன் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி. சரவணன் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை ஆறு மாதத்திற்குள் மூடவேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
1937ஆம் ஆண்டில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்கீழ் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும், அங்கு வாங்கும் மதுபானங்களை வீடுகளிலோ அல்லது தனியான இடங்களிலோ அருந்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கு சட்டப்படி மதுபானக் கடைகளோடு தின்பண்ட கடைகள், பார்கள் அமைப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், வழக்கிற்கு அப்பாற்பட்டு, இந்த உத்தரவை தனி நீதிபதி பிறப்பித்துள்ளதாகவும், மனுதாரர்கள் எவரும் பார்களை மூடவேண்டும் என்று கேட்கவில்லை என்றும் தெரிவித்தார். எனவே, தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும், டாஸ்மாக் நிறுவன பார்களை நடத்த அதிகாரம் உள்ளது என்றும் வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக் பார்களை மூடவேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், டாஸ்மாக் நிறுவனம் பார் நடத்த டெண்டர் நடவடிக்கை கோரலாம் எனக் குறிப்பிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'உயர்நீதிமன்றம் முன்பே ஆக்கிரமிப்பா?-அதிரடி உத்தரவு'