சென்னை: புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு மருத்துவ இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் அளிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் இடம் வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்டம், குமுளம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், புதுச்சேரி ஆர்.எஸ்.பாளையத்தில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் அரசுப் பள்ளியில் படித்த போதும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தனக்கு புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேரமுடியாது என்பதால், தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்ற அடிப்படையில் அரசு அறிவித்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தும், கவுன்சிலிங்குக்கு அழைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்பதால் மனுதாரருக்கு இந்த சலுகை வழங்க முடியாது என கூறப்பட்டிருந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி துரைசாமி, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டு பலனை, புதுச்சேரியில் படித்த மாணவர்களுக்கு நீட்டித்து வழங்கி உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.