சென்னை:உயர் கல்வி, பள்ளிக் கல்வித் துறைகளில் தேசியக் கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்துதல் குறித்த மத்திய அரசுத் துறைகளின் சுற்றறிக்கை, கருத்துக் கேட்பு அறிவிப்புகள் ஆகியவற்றின் மீது மாநில அரசின் நிலைப்பாடு குறித்தும், கொள்கை வழிகாட்டுதலை வழங்கிட வேண்டும் என முதலமைச்சருக்குப் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கடிதம் அனுப்பியுள்ளது.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”வரைவு தேசிய உயர் கல்வித் தகுதிக் கட்டமைப்பு 2022 குறித்து பிப்ரவரி 13ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது பிப்ரவரி 21 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறையில் தேசியக் கல்விக் கொள்கை 2020-யை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆவணகள் குறித்த கருத்து கேட்பிற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
வரைவு நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (Draft Institutional Development Plan - IDP), வரைவு தேசிய உயர் கல்வித் தகுதிக் கட்டமைப்பு (Draft National Higher Education Qualifications Framework - NHEQF) ஆகிய இரண்டு ஆவணங்கள் குறித்துத் தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறை என்ன கருத்தைத் தெரிவித்துள்ளது? இது குறித்துத் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பதைக் குறித்த எந்தத் தெளிவான அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.