சென்னை: கோயில் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் 75-க்கும் மேற்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவற்றில் 38 உத்தரவுகளை அமல்படுத்தி விட்டதாகவும், 5 உத்தரவுகள் மாநில அரசு தொடர்பில்லாதது என்றும், 32 உத்தரவுகளில் மறு ஆய்வு செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 01) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பழமையான கோயில்கள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான பணியில் கோயில்களின் செயல் அலுவலர்கள், பொதுப்பணித் துறையினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இரு துறை அதிகாரிகளும், கோயில்கள் புனரமைப்பிற்கான மாவட்ட மற்றும் மாநில குழுக்களின் ஆலோசனை படி செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களுக்கான நிதி, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், கோயில்களின் கணக்குகளை தணிக்கை செய்ய தமிழ்நாடு தணிக்கை துறை தலைவர் தலைமையில் 5 நபர்கள் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 5,82,039 ஏக்கர் நிலங்களில் 3,79,000 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நிலம் கண்டறியப்பட்டு வருவதாகவும், நாளொன்றுக்கு 2,000 ஏக்கர் வீதம் மீட்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கோயில்களில் ஸ்ட்ராங் ரூம்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோயிலில் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டதாகவும் அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் தெரிவித்தார். எனவே நீதிமன்ற பிறப்பித்த உத்தரவில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், சிலவற்றை மறு ஆய்வு செய்யக்கோரும் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.