சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகள் செய்யலாமா - நீதிமன்றம் ஆய்வு - சென்னை உயர்நீதிமன்றம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசு கட்டுபாடுகளை விதிக்க முடியுமா என ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
![சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகள் செய்யலாமா - நீதிமன்றம் ஆய்வு Madras High court](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10:34:32:1630775072-tn-che-08-encironmentalzones-script-7204624-04092021181058-0409f-1630759258-564.jpeg)
நீலகிரி மாவட்டம் மசனக்குடி கிராமத்தில் பஞ்சாயத்து ஒப்புதல் பெற்று நவாப் சபத் அலிகான் என்பவர் ரிசார்ட் ஒன்றை நடத்தி வந்தார்.
குடியிருப்புக்காக ஒப்புதல் பெற்று, அதை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதாக கூறி மசனக்குடி பஞ்சாயத்து நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிசார்ட் தொடங்குவதற்கு அனைத்து அனுமதிகளும் பெற்று, உரிய வரிகளை செலுத்தியுள்ளதாக அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ரிச்சார்ட்க்கு எதிரான நடவடிக்கைகளை பொறுத்த வரை தற்போதைய நிலையை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலங்களின் மீது அரசு கட்டுப்பாடுகள் விதிக்க முடியுமா? எனவும், சுற்றுசூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியுமா? அவைகளுக்கு தடை விதிக்க முடியாமா? என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், இந்த வழக்கில் மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறைகள், வீட்டுவசதி வாரியம், ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம், நீலகிரி ஆட்சியர் உள்ளிட்டோரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, இது குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.