தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்தி திணிப்புக்கு தமிழ்நாடு அரசு துணைபோகிறது - வைகோ குற்றச்சாட்டு - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

சென்னை: மத்திய பாஜக அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு துணை போகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

vaiko

By

Published : Jul 19, 2019, 6:47 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள், இதரப் பணியாளர்களுக்கான ‘பயோ மெட்ரிக்’ கருவிகளில் தமிழ் நீக்கப்பட்டு, இந்தி, ஆங்கிலத்தில் விபரங்கள் மாற்றப்பட்டதைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘பயோ மெட்ரிக்’ வருகைப் பதிவேடு கருவியில் தமிழ் மொழியை நீக்கிவிட்டு, இந்தியைப் புகுத்த வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? திட்டமிட்டு இந்தி மொழியை வலிந்து திணிக்கின்ற திட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் கல்வித் துறை அனுமதி கொடுத்தது கடும் கண்டனத்துக்கு உரியது.

சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின் செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் முத்திரை முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனமா? அல்ல இந்தி மொழி ஆய்வு நிறுவனமா? செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் தமிழுக்கு இடம் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது ஆகும்.

மத்திய பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழித் திட்டத்தைப் புகுத்த முனைந்திருக்கிறது. ரயில்வேத் துறை, அஞ்சல் துறை உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் தகவல் தொடர்பில் தமிழ் மொழியை நீக்கிவிட்டு, இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட்டு இருக்கிறது. இவை எல்லாம் மத்திய பாஜக அரசின் இந்தி வெறிப் போக்கைக் காட்டுகிறது. இதற்கு துணைபோகும் தமிழ்நாடு அரசும் இந்தியைப் புகுத்துவது மன்னிக்க முடியாதது.

மேலும், தமிழ்நாடு அரசின் புதிய பேருந்துகளில் இந்தி சொற்றொடர்கள், பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு கருவியில் இந்தி என்று தமிழ்நாட்டை ‘இந்தி மயம்’ ஆக்கும் முயற்சிகள் தொடர்ந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என எச்சரிக்கின்றேன். தமிழ்நாடு அரசு உடனடியாக பள்ளிகளில் உள்ள பயோ மெட்ரிக் கருவிகளில் இந்தியை நீக்கிவிட்டு, தமிழ் மொழியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details