சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை முதன்மைச் செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில், மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 2020-2021ஆம் ஆண்டு முதல் பராமரிப்புப்படி உயர்த்தி வழங்கப்பட்டுவரும் விகிதத்திற்கு இணையாக மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
அதனடிப்படையில் பள்ளிக் கல்வி முதல் உயர் கல்வி வரை பயிலக்கூடிய ஆதி திராவிட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித் தொகைக்கு இணையாகத் தமிழ்நாடு அரசும் உயர்த்தியுள்ளது.
அதன்படி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையும், ஐடிஐ, மூன்று ஆண்டு டிப்ளமோ மாணவர்களுக்கு விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 2,100 லிருந்து ரூ. 4,000 ரூபாயாகவும்,
தினசரி வீடு சென்றுவரும் மாணவர்களுக்கு ரூ. 1,200 லிருந்து ரூ. 2,500 ரூபாயாகவும், தொழிற்கல்விப் படிப்பில் டிப்ளமோ, டிகிரி படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு ரூ. 2,700 லிருந்து ரூ. 9,500ஆகவும் தினசரி வீடு சென்று வரும் மாணவர்களுக்கு ரூ. 1,680 லிருந்து ரூ. 6,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.