உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் சேர, அனைத்து மாணவர்களுக்கும் நீட் நுழைவுத் தேர்வை மத்திய தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், அத்தேர்வில் மாநில பாடத்திட்டப்படி கேள்விகள் கேட்கப்படாததால், அரசுப் பள்ளி மாணவர்கள் ஒற்றை இலக்கத்திலேயே தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க பலரும் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், நீட் தேர்வு வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு மசோதா கொண்டு வந்தது. இதற்கான ஒப்புதலுக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் அனுப்பி வைக்கப்பட்டு, மருத்துவ கலந்தாய்வுக்கு முன்பாக ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மசோதா மீது முடிவு எடுக்க நான்கு வாரங்கள் ஆகும் என ஆளுநர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இளங்கோவன், ”ஆளுநர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இந்த மசோதாவை காலதாமதம் செய்து வருகிறார். அதனால், ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆளுநரை உடனே திரும்ப அழைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும். அவ்வாறு செய்வதால், மத்திய அரசின் மாநில பிரதிநிதியாக செயல்படும் ஆளுநர் மசோதாவை நிறைவேற்ற வாய்ப்புள்ளது” என்றார்.
’ஆளுநரை உடனே திரும்ப அழைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்’ அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டை மத்திய தொகுப்பில் இருந்து கேட்கவில்லை என்று தெரிவித்துள்ள, மூத்த வழக்கறிஞரும் திமுக மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன், தனக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களில் முன்னுரிமை அளிக்கவே, தமிழ்நாடு அரசு மசோதா கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார். ஆளுநருக்காக காத்திருப்பது மாணவர்களின் மருத்துவ கனவை பாதிக்கும் என்பதால், தமிழ்நாடு அரசு மசோதாவிற்கு பதிலாக சட்டம் இயற்றி உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தலாம் என்றும் கூறினார். இதனால் நடப்பாண்டிலேயே 300 மாணவர்களுக்கு கட்டாயம் மருத்துவ இடம் கிடைக்கும் என்று வில்சன் தெரிவித்தார்.
’மசோதாவிற்கு பதிலாக சட்டம் இயற்றி உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தலாம்' இதையும் படிங்க: இட ஒதுக்கீட்டு மசோதா: மாணவர்கள் நலனை காவு கொடுக்கப்போகிறாரா முதலமைச்சர்- ஸ்டாலின் சாடல்