சென்னை:தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தற்போது இந்த கொள்கை குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க உள்ளது.
தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு பாதகமான அம்சங்கள் இருப்பதாக திமுக தொடர்ந்து எதிர்த்து வந்தது. மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சி அமைந்தால் தமிழ்நாட்டிற்குத் தனியாகக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்க மாநில அளவிலான குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு:அந்தக் குழுவின் தலைவராக முன்னாள் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் நியமிக்கப்பட்டார். மேலும், உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன், தேசிய கணித அறிவியல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக் குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில், ராம சீனிவாசன், யூனிசெப் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்தினம் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டனர்.
புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பதற்குத் தமிழ்நாடு அரசு ஓராண்டு காலக்கெடு வழங்கியது. இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு குழு தலைவருமான முருகேசன் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் நேற்று (ஜூலை 12) மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பது மற்றும் கல்விக் கொள்கையை வடிவமைப்பதில் உள்ள சவால்கள் குறித்து குழுவினர் தீவிரமாக ஆலோசனை செய்தனர்.