தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 19, 2020, 11:11 PM IST

ETV Bharat / city

'கூட்டணி குறித்த கருத்துகளை இரு கட்சியினரும் பகிரக் கூடாது' - ஸ்டாலின் அறிக்கை

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின், திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த கருத்துகளை இரு கட்சியினரும் பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின் அறிக்கை
ஸ்டாலின் அறிக்கை

திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்று முடிந்த 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இடங்கள் ஒதுக்கீடு செய்துகொள்ளப்பட்டன.

அதனடிப்படையில் கழகத்தின் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. மறைமுகத் தேர்தலில் குறைந்த இடங்களே வழங்கப்பட்டதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, வெளிப்படையாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். சுமுகமாகப் பேசித் தீர்த்திருக்க வேண்டிய இடப் பங்கீடு குறித்து, அறிக்கை மூலம் பொதுவெளிக்குக் கொண்டுசென்றது, கடந்த சில நாள்களாக இருதரப்பிலும் விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி வகுத்தது.

தற்போது திமுகவின் மனப்பாங்கினை உணர்ந்த அவர், திமுக - காங்கிரஸ் இடையே எந்தக் கருத்து வேறுபாடு கிடையாது. மதவாத, பாசிச சக்திகளையும் அவர்களை ஆதரித்து கைப்பாவைகளாகச் செயல்பட்டுவருபவர்களையும் எதிர்த்து திமுக மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும் என்றும் ஆக்கபூர்வமாகத் தெரிவித்துள்ளார். இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசியும் உள்ளார்.

ஆகவே கூட்டணி தொடர்பாக ஏதோ ஒரு சில இடங்களில் இருதரப்பிற்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன்வைத்து இரு தரப்புமே இந்த விவாதத்தை பொதுவெளியில் நடத்திக்கொண்டிருப்பது திமுகவின் தலைமையிலான கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என்று ஏங்கித்தவிக்கும் குள்ள நரி சக்திகளுக்கும் சில ஊடகங்களுக்கும் அசைபோடுவதற்கான செயலாக அமைவதை நான் சிறிதும் விரும்பவில்லை.

ஆகவே விரும்பத்தகாத இத்தகைய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூட்டணி குறித்த கருத்துகளை இரு கட்சியினரும் பொதுவெளியில் தெரிவிப்பதைக் கட்டாயம் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க;

புதிய பரப்புரையை தொடங்கவுள்ள நிதியமைச்சகம்!

ABOUT THE AUTHOR

...view details