தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விடியலுக்கான முழக்கம்! - திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கடிதம் - தபால் வாக்கு குறித்து ஸ்டாலின் அறிக்கை

சென்னை; திமுக தலைவர் ஸ்டாலின் மார்ச் 7ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கடிதம்
திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கடிதம்

By

Published : Mar 5, 2021, 7:06 PM IST

அதில் கூறியுள்ளதாவது, "திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சிறுகனூரில் மார்ச் 7ஆம் தேதி நடைபெறும் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தொலைநோக்குப் பார்வை கொண்ட - தமிழ்நாட்டின் அடுத்த பத்தாண்டுகளுக்கான செயல்திட்டங்கள் அடங்கிய லட்சியப் பிரகடனத்தை வெளியிடுகிறேன்.

‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்’

இருண்ட தமிழ்நாட்டிற்கு நிரந்தர ஒளி வழங்கிட, உதயசூரியனால்தான் முடியும் எனும் மக்களின் நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றிடும் வகையில் தமிழ்நாட்டின் ‘விடியலுக்கான முழக்கம்’ எனும் தலைப்பில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சி அமைந்ததும் நாள்தோறும் நிறைவேற்றப்படவிருக்கும் சாதனைகளின் சுருக்க வடிவம்தான் இந்த செயல் திட்டம். ஆட்சிக்கு வந்தபிறகு அதனை நிறைவேற்றாவிட்டால், பொதுமக்கள் கேள்வி கேட்கலாம் என்ற உரிமையினையும் வழங்க இருக்கிறேன். ஏற்கனவே சொன்னதுபோல, தமிழ்நாடு மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். வெற்றி நம் பக்கம் இருக்கிறது. அதை அடைவதற்கான வழி, ஆட்சியாளர்களின் அதிகார முறைகேடுகளால் கடுமையாக்கப்பட்டிருக்கிறது.

முறைகேடான தபால் வாக்கு:

தேர்தல் வேலைகளில் உள்ள அரசுப் பணியாளர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டோர், 80 வயதை தாண்டியர்வர்கள் உள்ளிட்டோருக்கு தபால் வாக்குகள் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன் உள்நோக்கத்தை உணர்ந்த திமுக, இது குறித்து சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 80 வயது நிறைந்த முதியவர்கள் இம்முறை நேரிலோ அல்லது தபாலிலோ வாக்களிக்கலாம் என்ற வாய்ப்பினைத் தேர்தல் ஆணையம் அவசர கதியில் வழங்கியுள்ளது.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவு, கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தும், தஆளுந்தரப்பினர் அடாவடி செய்து அவரது வெற்றியைப் பறித்தநிலையில், அடுத்த சட்டப்பேரவைக்கான தேதி அறிவிக்கப்பட்டும், இன்னமும் சட்டப்போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தபால் வாக்குகளை முன்வைத்து பல தொகுதிகளில் ஆளுந்தரப்புக்கு சாதகமாக முடிவுகள் வெளியாகின. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி - தோல்வி நிர்ணயிக்கப்பட்ட தொகுதியும் உண்டு.

திக்கெட்டும் வெற்றி முழக்கமாகட்டும்!

மார்ச் 7இல் லட்சியப் பிரகடனம் வெளியீடு; மார்ச் 10இல் வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; மார்ச் 11இல் தேர்தல் அறிக்கை வெளியீடு. அதன்பின் பரப்புரைப் பயணம் எனப் புயல் வேகத்தில் செயல்பட வேண்டிய பொறுப்பு உள்ளது.

தீரர் கோட்டத்தில் வெளிப்படும் முதல் முழக்கம், திக்கெட்டும் வெற்றி முழக்கமாகட்டும்! வெற்றிக்கான தொடக்கமாக அமையட்டும்! தமிழ்நாட்டைக் கவ்வியுள்ள பத்தாண்டு கால இருட்டை விரட்டட்டும்! உடன்பிறப்புகளின் வருகையால், பங்கேற்பால், களப்பணியால் அவலம் மிகுந்த அதிமுக ஆட்சி முடியட்டும். உதயசூரியனின் வெற்றிக் கதிர்களின் வெளிச்சத்தில் தமிழ்நாடு விடியட்டும்!"என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details