தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தடை தொடரும் என்று உத்தரவிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது.
தொடர்ந்து, தீர்ப்பின் மீதான தங்களின் பார்வையை அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்திவருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் இந்தத் தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதில், "ஸ்டெர்லைட் வழக்கில் மக்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. இது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மகத்தான-மனிதகுலத்தினைக் காக்கும் தீர்ப்பாகும்.
மேலும் சுற்றுப்புறச்சூழலுக்கும்–தங்களின் பாதுகாப்பிற்கும் பேராபத்தாக இருந்த ஆலையை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராடிய அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 உயிர்கள் கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதுவரை இதற்கு நியாயம் கிடைக்காதது வேதனையளிக்கிறது. தாமதமாகும் நீதி, மறுக்கப்படும் நீதி ஆகிவிடும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.