உள்ளாட்சித் தேர்தல் குறித்த நேற்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து மாநில தேர்தல் ஆணையம் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்க கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் "புதிய அறிவிப்பானது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணித்திடும் வகையில் அமைந்துள்ளது. "பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினையும், வார்டு மறுவரையறையினையும், சட்ட விதிமுறைப்படி செய்து, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று தெளிவாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மாநில தேர்தல் ஆணையம் படிக்கவில்லை. தமிழ்நாடு அரசும் கவனம் செலுத்தவில்லை. 'சட்டத்தை படுகொலை' செய்யும் ஒரு தேர்தல் ஆணையர் - முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரின் சொல் கேட்டு நடக்கும் 'அதிமுக கிளைச் செயலாளர்' போல் மாறியிருப்பது வேதனையளிக்கிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பழைய தேர்தல் அறிவிப்பை ரத்து செய்த மாநிலத் தேர்தல் ஆணையர், புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு, அரசியல் கட்சிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம்கூட நடத்தாமல், 'நேர்மையான, சுதந்திரமான' தேர்தல் என்ற உயர்ந்த நோக்கங்களைக் கேலிக் கூத்தாக்கியிருக்கிறார்.