தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பள்ளிப்பருவ 29 சி பேருந்து பயணம்... சட்டப்பேரவையில் நினைவுகூர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்.... - அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணச் சலுகை திட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 29 சி பேருந்தில் பயணித்தார். இதுகுறித்தும், தான் பள்ளிப்பருவத்தில் 29 சி பேருந்தில் பயணித்தது குறித்தும் சட்டப்பேரவையில் நினைவுகூர்ந்து பேசினார்.

stalin
stalin

By

Published : May 7, 2022, 7:29 PM IST

சென்னை:திமுக அரசு பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்ததையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் 29சி அரசுப் பேருந்தில் பயணம் செய்து, பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். இதுதொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "29சி பேருந்து என்னுடைய வாழ்நாளிலேயே மறக்கமுடியாத பேருந்து. ஏனென்றால், பள்ளிப் பருவத்தில் இருந்தபோது, நான் கோபாலபுரத்திலிருந்து 29சி மூலம் பள்ளிக்குச் சென்று வந்தேன்.

அப்போது கலைஞர், பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார். அதே 29சி பேருந்தில்தான் இன்றைக்குக் காலையில் நான் ஏறி பயணித்தேன். அந்தப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த மகளிரிடத்தில், ஓராண்டு திமுக ஆட்சி குறித்து விசாரித்தேன். "மிகவும் திருப்தியாக இருக்கிறது- உங்களைப் பார்த்ததே அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறினார்கள்.

அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணச் சலுகை திட்டம் குறித்து, ஏற்கெனவே மூன்று வழித் தடங்களில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. அதன்படி இத்திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினப் பெண்கள் அதிக அளவில் பயன்பெற்று வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதிலும் குறிப்பாகப் பட்டியலினப் பெண்கள் அதிகமாக பயனடைந்திருக்கிறார்கள்.

அதாவது ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 600 ரூபாயில் இருந்து ஆயிரத்து 200 ரூபாய் வரைக்கும் மிச்சம் ஆகிறது. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வரை, 106 கோடியே 34 லட்சம் பயணங்களை பெண்கள் இலவசமாக மேற்கொண்டுள்ளார்கள். இதுதான் மகத்தான சாதனை. அவர்கள் வாங்கும் மாத வருமானத்தில் 11 சதவீதம் மிச்சம் ஆகிறது. அன்றாடக் கூலி வேலை பார்ப்பவர்களுக்கு, அவர்களது செலவில் 20 சதவீதம் மிச்சம் ஆகியிருக்கிறது.

இப்படி மிச்சமாகும் பணத்தைச் சேமித்து வைப்பதாக பயனடைந்த பெண்கள் சொல்கிறார்கள். அதாவது, அன்றாடச் செலவுக்கு இல்லை என்ற நிலையில் இருக்கக்கூடிய பெண்கள் சேமிக்கக் கூடியவர்களாக ஆகியிருக்கிறார்கள். 5 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பாதிக்கக்கூடிய பெண்களுக்கு வாழ்க்கைச் சுமையைக் குறைக்கக்கூடிய திட்டமாக இது அமைந்திருக்கிறது. ஒரே ஒரு கையெழுத்தின் மூலமாக கோடிக்கணக்கான பெண்களுடைய வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்பதை நிரூபித்திருக்கும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய 'திராவிட மாடல் ஆட்சி' என்று தெரிவித்தார்".

இதையும் படிங்க: 2ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திமுக - முதல்வன் படப் பாணியில் மக்களை சந்தித்த முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details