தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘பத்திரிகைகளிடம் பாராட்டு பெறவே முதலமைச்சர் முனைப்பு’ - ஸ்டாலின் - dmk leader stalin news

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க, பகட்டான திட்டங்களைத் தொடங்கி வைப்பதால் எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin slams edappadi palaniswami

By

Published : Aug 22, 2019, 5:29 AM IST

Updated : Aug 22, 2019, 7:04 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்' தொடக்கி வைத்த நேரத்தில், சேலம் பசுமை வழி சாலைத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து முறையிடுவதற்கு வந்த விவசாயிகளை கைது செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தான் ஒரு விவசாயி என்று அடிக்கடி கூறிக்கொள்ளும் முதலமைச்சர், குறையைச் சொல்ல வந்த விவசாயிகளை சிறைப்பிடித்தது அராஜகத்தின் அடையாளமாகவே தெரிகிறது. புதிய தலைமைச் செயலாளர் புடைசூழ சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த ‘முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்’, ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதை தவிர, அதில் ஏதும் சிறப்போ, மக்கள் குறை தீர்க்கும் நல்ல நோக்கமோ இருப்பதாகத் தெரியவில்லை.

திமுக ஆட்சியில் ‘மனுநீதி நாள் முகாம்’ 1969-லேயே தொடங்கப்பட்டு மக்களின் குறைகள் அவ்வப்போது தீர்த்து வைக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாவது புதன்கிழமை மக்களைத் தேடி அதிகாரிகள் கிராமங்களுக்குச் சென்றனர்.ஆனால், அதிமுக ஆட்சியிலோ ‘அரசு நிர்வாகம்’ தோல்வியடையும் போதெல்லாம், ஒரு புதிய திட்டத்தை விளம்பரப்படுத்தி அதன் மூலம் தங்கள் தோல்வியை மறைப்பது வாடிக்கையாகிவிட்டது.

அந்த வரிசையில் முதலில் ‘அம்மா திட்டம்’ ஒன்றை அறிவித்து 63 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டுவிட்டதாக மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்தார்கள். 'அம்மா திட்டம்' தற்போது என்ன நிலையில் உள்ளது என்பது தெரியவில்லை.தனது 'நிர்வாகத் தோல்வியை' மறைக்க, இப்போது புதிய 'சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்' கொண்டு வந்திருக்கிறார்.

மாவட்டங்களில் ஆட்சித் தலைவர் தலைமையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ‘மக்கள் குறை தீர்க்கும் நாள்’ நடைபெறுகிறது. ஆனால், முதியோர் உதவித்தொகை வழங்கவோ, பட்டா கோரியோ, பட்டா மாறுதலுக்கோ, நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கோ கொடுக்கப்படும் பொதுமக்களின் மனுக்கள் அனைத்தும் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படக் காட்சிகள் போலவே தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. ‘குறை தீர்ப்பு முகாம்’, ‘மனுக்களை, குறைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க வழியின்றி, இன்னொரு அதிகாரிக்கு அனுப்பும் முகாம்களாக’ அதிமுக ஆட்சியில் மாறிவிட்டது.

அரசு நிர்வாக அலங்கோலங்களை சரிசெய்ய முடியாத முதலமைச்சர், இப்படி “புதிய மாவட்டங்கள்”, “புதிய முகாம்கள்” மூலம், மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப நினைப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

எனவே, முதலமைச்சர் பழனிசாமி தன்னால் முடிந்தால் அரசு நிர்வாகத்தை சீர்செய்ய அரசு அலுவலகங்களில் அமைச்சர்கள் மட்டத்தில் உள்ள லஞ்ச புகார்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பகட்டான திட்டங்களை, பத்திரிகைகள் பாராட்டி எழுதுவதற்காக தொடக்கி எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Aug 22, 2019, 7:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details