தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வரலாற்றைப் பறைசாற்றும் அருங்காட்சியகம்: திறந்துவைத்த ஸ்டாலின்! - காவல் துறை அருங்காட்சியகம் திறந்துவைப்பு

காவல் துறை அருங்காட்சியகத்தைப் பொதுமக்களின் பார்வைக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

காவல் துறை அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்த ஸ்டாலின்
காவல் துறை அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்த ஸ்டாலின்

By

Published : Sep 28, 2021, 12:29 PM IST

Updated : Sep 28, 2021, 12:45 PM IST

சென்னை: எழும்பூரில் உள்ள 178 ஆண்டுகள் பழமைவாய்ந்த முன்னாள் காவல் ஆணையர் அலுவலகம் புனரமைக்கப்பட்டுப் புதுப்பொலிவுடன் தமிழ்நாடு காவல் துறை அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இன்று ஸ்டாலின் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவைத்தார்.

முன்னதாக காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

சென்னை எழும்பூரில் 1742ஆம் ஆண்டு சொகுசு பங்களாவாக இருந்த கட்டடம் 1756இல் சென்னை காவல் ஆணையர் அலுவலகமாக மாற்றப்பட்டது. இடப் பற்றாக்குறை, நவீன வசதிக்காக ஆணையர் அலுவலகம் 2017ஆம் ஆண்டு வேப்பேரியில் உள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு அங்குச் செயல்பட்டுவருகிறது.

காவல் துறை அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்த ஸ்டாலின்

இதையடுத்து, எழும்பூரில் உள்ள பழைய கட்டடம் ஆறு கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் 24 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் இரண்டு தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தைக் காணவரும் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி - கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் செப்டம்பர் 30 வரை எவ்வித கட்டணமுமின்றி பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அக்டோபர் 1ஆம் தேதிமுதல் அருங்காட்சியகத்தைப் பார்வையிட வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனுமதி கட்டணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்த ஸ்டாலின்

வரலாற்றை நினைவுப்படுத்தும் புகைப்படங்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து தற்போது வரை காவலர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், காவலர்களின் சிறப்பு, அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், காலத்துக்கும் மறக்க முடியாத நிகழ்வுகளின் புகைப்படங்கள் எனக் காவலர்களின் வரலாற்றை விவரிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல் துறையின் வரலாற்றை மக்கள் அறிந்துகொள்வதற்காகக் காவல் துறை பற்றிய வரலாற்றுச் சார்ந்த பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. மெரினா கடற்கரையில் ரோந்துப் பணிக்காக காவலர்கள் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம், உயரலுவலர்கள் மட்டும் பயன்படுத்திய அந்தக் கால சொகுசு வாகனம் அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது.

அதுமட்டுமின்றி, 1982இல் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சென்னை காவல் துறையினர் கைதுசெய்த புகைப்படம், மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி கடைசியாக சென்னை வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டதும் காவல் துறை உயர் அலுவலர் விஜயகுமார் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் என்று காலத்துக்கும் மறக்க முடியாத பல புகைப்படங்கள் வரலாற்றை நினைவுப்படுத்துகின்றன.

அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்த ஸ்டாலின்

அருங்காட்சியகத்தின் உள்ளே பல்வேறு மூலப் பொருள்களாலான வெடிமருந்துகள், சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைக் கண்டறிவதற்குக் காவலர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள், புலனாய்வு உபகரணங்கள், 1918இல் இருந்து தற்போதுவரை காவலர்கள் பயன்படுத்திய அனைத்து ரக துப்பாக்கிகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 1939ஆம் ஆண்டிலிருந்து காவலர்களுக்கு வழங்கப்பட்ட உயரிய பதக்கங்கள், காவல் துறையால் மீட்கப்பட்ட பண்டைய கால வாள்கள், சிலைகள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர காவலர்கள் பயன்படுத்தும் பேண்ட் வாத்தியங்கள் உள்பட பல பொருள்கள் அருங்காட்சியகத்தில் பாதுகாத்துவைக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை எழும்பூரில் தயாராகிவந்த இந்தக் காவலர் அருங்காட்சியகத்தை ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார். மேலும் அங்கிருந்த பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பள்ளி மாணவர்கள், காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தேர்தல் முடிந்த கையோடு பள்ளிகளைத் திறக்க உத்தேசம்!

Last Updated : Sep 28, 2021, 12:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details