இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கர்நாடக முதலமைச்சர் தங்களைச் சந்தித்தபோது, மேகதாது அணை உள்ளிட்ட நீர்ப்பாசனத்திட்டங்களுக்கு முன்கூட்டியே அனுமதி வழங்குமாறு வலியுறுத்தியிருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. மேகதாது அணைத் திட்டமானது, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை முற்றிலும் மீறுவதாகும். மேலும், இத்திட்டம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பங்கீட்டு விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அதனை ஏற்க முடியாது என சட்டப்பேரவையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இவ்விவகாரம் தற்போது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
குடிநீர்த் திட்டம் என்ற போர்வையில் முன்மொழியப்படும் மேகதாது அணைத் திட்டம், காவிரியின் தாழ்வான வடிநிலப் பகுதியாக உள்ள தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வருவதில், எப்போதுமே சரி செய்யவோ, மாற்றியமைக்கவோ முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பல லட்சம் மக்களின் தேவையை நிறைவு செய்யும் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கும் இது அச்சுறுத்தலாக உள்ளது. முக்கியமாக, அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ள தமிழகத்திற்கான நீர்ப்பங்கீட்டை இது கடுமையாக பாதிக்கும்.