சென்னை: கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தீவிரத்தால், மக்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு பல முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் இன்று (மே.19) தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
அக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், 'இந்தத் தொற்று ஏற்படுத்தி இருக்கும் பெரும் பாதிப்பினையும், உயிர் காக்கும் மருத்துவப் பொருள்களுக்கான தேவையையும் மனதில் கொண்டு, தங்களின் சமூக பொறுப்புணர்வு முயற்சியின் மூலமாக அத்தியாவசியப் பொருள்களை உடனடியாக வழங்கவும், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
தொழில் நிறுவனங்கள், தொழில் கூட்டமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஸ்டாலின் கலந்தாய்வுக் கூட்டம் இந்நிகழ்வின் போது, ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ஐந்து கோடி ரூபாய், LMW நிறுவனம் மூன்று கோடி ரூபாய், பண்ணாரி அம்மன் சுகர்ஸ் லிமிடெட் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்கள்.
மேலும், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தொழில் நிறுவனரங்களின் பிரதிநிதிகள் உறுதி அளித்தனர்.
தொடர்ந்து, பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேரடியாகவும், இணையவழி காணொலி மூலமாகவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தலைமைச் செயலர் இறையன்பு, அரசு உயர் அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'லிவ்விங் டூ கெதரை ஏற்க முடியாது' - பாதுகாப்பு கோரிய காதலர்களுக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் பதில்