சென்னை:முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று (மே.14) நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் மிகப்பெரிய பாறை உருண்டு விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் பள்ளத்தில் சிக்கிய கிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன், விஜய் ஆகியோர் மீட்பு படையினரால் உயிருடன் இன்று (மே.15) மீட்கப்பட்டனர். மேலும் 4 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நேற்று (14.5.2022) இரவு சுமார் 11.30 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராமம், அடைமதிப்பான்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஆறு நபர்கள் (முருகன், விஜய், செல்வம், முருகன், ராஜேந்திரன், செல்வகுமார்) சிக்கியுள்ளனர்.
அதில் இருவர் முருகன் மற்றும் விஜய் ஆகியோர் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்விபத்தில் சிக்கியுள்ள செல்வம், முருகன், செல்வகுமார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.