சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின்கீழ் படித்த 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 9 லட்சத்து 55ஆயிரத்து 474 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள்களை திருத்தி, மதிப்பெண்களை தொகுத்து அவற்றை தேர்வுத்துறை அலுவலர்கள் சரிபார்த்த பின், தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நடைபெற்று முடிவடைந்துள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கெனவே, திட்டமிட்டபடி 17ஆம் தேதி காலை 10 மணிக்கு http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் எனத்தெரிகிறது. இதற்கான அறிவிப்பு அரசுத் தேர்வுத்துறையால் முறைப்படி அறிவிக்கப்படும். மேலும் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.
தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையதளம் மூலம் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11ஆம் வகுப்பில் சேர்ந்துகொள்வதற்காக நடப்பு கல்வியாண்டுக்கான 11ஆம் வகுப்புகள் வரும் 27ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:வரும் 2022-23ஆம் கல்வியாண்டில் மதிப்பெண் அடிப்படையில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை!