தமிழ்நாடு

tamil nadu

ஈழத்தமிழர்கள் ஆராய்ந்து வாக்களிக்க 'வைகோ' வேண்டுகோள்!

By

Published : Nov 15, 2019, 8:00 PM IST

சென்னை: நாளை இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலில் யார் அதிபராக வரக்கூடாது என ஆராய்ந்து ஈழத்தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Vaiko

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள ஈழத்தமிழர்களுக்கு மதிமுக பொதுசெயலாளர் வைகோ அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வைகோ தனது அறிக்கையில், 'இலங்கையில் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில், யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதை ஆராய்ந்து ஈழத்தமிழர்கள் வாக்கு அளிக்க வேண்டும். ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்களை மகிந்த ராஜபக்ச கொன்று குவித்தபோது, உடந்தையாகச் செயல்பட்ட கொலை வெறியன் கோத்தபய ராஜபக்ச, தேர்தலில் போட்டியிடுகின்றார்.

ஈழத்தமிழர் இனப்படுகொலையை நடத்திய ராஜபக்ச, பன்னாட்டு நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய நபர் ஆவார். அவரது தம்பி கோத்தபய ராஜபக்ச உத்தரவின்பேரில்தான் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தி கொன்று ஒழிக்கப்பட்டனர்' என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், 'பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை, வயது முதிந்தவர்களையும் கொன்று குவித்த கோத்தபய ராஜபக்ச தான், 90 ஆயிரம் தமிழ்ச் சகோதரிகள் விதவைகள் ஆகி வாழ்வு இழந்து தவிப்பதற்கும், இறுதிப் போரின்போது தஞ்சம் அடைந்த பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளை வதை முகாம்களில் அடைத்து வைத்து, கொடூரச் சித்ரவதை செய்து கொன்று வீசியதற்கும், தமிழர்களின் தாயகப் பகுதிகளான வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றத்திற்கும், சிங்கள ராணுவம் தமிழர்களின் நிலம் உள்ளிட்ட சொத்துகளைக் கைப்பற்றிக் கொண்டு, தாய் மண்ணிலேயே அகதிகளாகத் தமிழர்கள் அலையும் கொடுமைக்கும் காரணம்' எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, வாக்குச் சாவடிக்குப் போகும் முன்பு, ஈழத்தமிழ் வாக்காளர்கள், தமிழ் இனத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு வாக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்' எனக் கோரிக்கை வைத்துள்ளார் வைகோ.

இதையும் படிங்க: மாட்டுச் சாணத்தில் அழகு சாதனப் பொருள்கள்: அசத்தும் பட்டதாரி இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details