சென்னை: விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்ற முத்துலெக்ஷ்மி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலுள்ள, சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான உயர் கல்வியை வழங்கும் நோக்கத்தில், வேலூர் மாவட்டத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்டது.
தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் 124 கலைக் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த நிலையில், பல்கலையிலிருந்து தொலைதூர மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாததாலும், பல்கலையில் தங்கி படிக்க முடியாத பொருளாதார சூழலாலும் உயர்கல்வியை தொடர முடியாத நிலை உருவாகி வருவதால், விழுப்புரத்தை தலையிடமாக கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதனை தொடர்ந்து, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
புதிய பல்கலைக்கழகம் நடப்பாண்டிலேயே செயல்பட தொடங்கும் என்றும் அறிவித்தார். இதுதொடர்பாக அவசர சட்டம் இயற்றப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.