பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் மறுவாழ்வுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் 2013ஆம் ஆண்டு நிர்பயா நிதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
நிர்பயா என்றால் பயம் அற்றவள் என்று பொருள். இந்த நிர்பயா நிதி மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் பெண்களுக்கு உதவுவதற்காக கட்டுப்பாடு அறைகளை உருவாக்கியுள்ளது.
ஆபத்தில் இருக்கும் பெண்கள் தங்களது மொபைல்போன் மூலம் தொடர்புகொண்டால், அந்த அழைப்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றடைந்து, அவர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு, தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை நகரம் முழுவதும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அளிக்கும் நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் ஹூட்டர் அலாரம், சென்சார் போன்ற பெண்களுக்கான தனித்துவ பாதுகாப்பு வசதிகள் கொண்ட SHE Toilets என்ற சிறப்பு கழிப்பறைகள் சென்னை மாநகராட்சியால் விரைவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.