தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் நவவம்பர் 11 முதல் 13 ஆம் தேதி வரை 8,757 சிறப்பு பேருந்துகள் உட்பட 14,757 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து 3,510 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், மறு திசையில் நவ 15 முதல் 18 ஆம் தேதி வரை 8,026 சிறப்பு பேருந்துகள் உட்பட 16,026 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே, கோயம்பேடு, பூந்தமல்லி, கே.கே.நகர், தாம்பரம், மாதவரம் ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், மக்கள் சிரமமின்றி எளிதாக சென்று வரும் வகையில், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, கே.கே.நகர், தாம்பரம், மாதவரம் ஆகிய 5 பேருந்து நிலையங்களுக்கும் நாளை முதல் 13 ஆம் தேதி வரை 310 சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பேருந்துகள் 24 மணி நேரமும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
310 சிறப்பு பேருந்துகள்! - சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அதன்படி, மணலி, திருவொற்றியூர், மாதவரம், பிராட்வே, அண்ணா சதுக்கம், எம்.கே.பி.நகர், தி.நகர், ஆவடி, திருவான்மியூர், திரு.வி.க.நகர், கேளம்பாக்கம், எண்ணூர், குன்றத்தூர், கண்ணகி நகர், வள்ளலார் நகர், பூந்தமல்லி, பெருங்குளத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 116 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பிராட்வே, தாம்பரம், வேளச்சேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், சோழிங்கநல்லூர், தி.நகர், மாமல்லபுரம், திருப்போரூர், அடையாறு பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தாம்பரம் புதிய பேருந்து நிலையத்திற்கு 114 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். செங்குன்றம், தி.நகர், பிராட்வே, அம்பத்தூர், திருவொற்றியூர், மந்தைவெளி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு 57 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், பெசன்ட் நகர் மற்றும் கேளம்பாக்கத்தில் இருந்து வடபழனி பேருந்து நிலையத்திற்கும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்திற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை!