சென்னை:சாத்தான்குளம் பென்னிக்ஸ், ஜெயராஜ் 'லாக் அப் டெத்’-ஐத் தொடர்ந்து, தற்போது சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்திலும் 'லாக் அப் மரணம்' ஒன்று நிகழ்ந்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் கடந்த 18ஆம் தேதி இரவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் மேற்கொண்ட வாகன சோதனையின்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
இளைஞர் மரணம்:அதில் வந்தவர்களின் கைகளில் 10 கிராம் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி இருந்ததாகக் கூறி, சுரேஷ் மற்றும் விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்து தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மறுநாள் 19ஆம் தேதி காலை கைது செய்யப்பட்ட விக்னேஷ் என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் விக்னேஷ் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காவல்துறை மீது குற்றச்சாட்டு:இதனையடுத்து மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் உயிரிழந்த விக்னேஷின் உடல் உடற்கூராய்பு செய்யப்பட்டு, அவரது சகோதரர் வினோத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இறப்பை மறைக்க மறைமுகமாக காவலர்கள் ரூ.1 லட்சம் கொடுத்ததாக உயிரிழந்த விக்னேஷின் சகோதரரான வினோத் தெரிவித்துள்ளார். இது குறித்து விக்னேஷின் சகோதரர் வினோத்திடம் பேசிய போது, கடந்த 18ஆம் தேதி இரவு தனது சகோதரர் விக்னேஷ் கைது செய்தவுடன் காவலர்கள் எந்தவிதமான தகவலையும் தெரிவிக்காமல் இறந்தவுடன் தகவல் தெரிவித்ததாக கூறினார்.
மறைமுகமாக ரூ.1 லட்சம் ஏன் கொடுக்கவேண்டும்? :மேலும் விக்னேஷின் உடலைப் பார்த்தபோது, முகத்தில் காயம் இருந்ததாகவும், அது போலீசார் தாக்கிய காயம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், காவலர்கள் மேன்ஷனில் அடைத்து வைத்து ஒருவரிடம் பேச முடியாத படி கொடுமைப்படுத்தியதாக வினோத் குற்றஞ்சாட்டி உள்ளார். இதுமட்டுமின்றி 'காவலர்கள் மறைமுகமாக தங்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கியதாகவும், அதாவது விக்னேஷ் வேலை பார்த்து வந்த குதிரை ஓட்டும் உரிமையாளரிடம் போலீசார் பணம் வழங்கி, அதை தங்களிடம் செலவுக்காகக் கொடுக்க வைத்ததுள்ளனர்' என்று வினோத் தெரிவித்தார். இது போன்ற கொடுமை வேறு யாருக்கும் நிகழக்கூடாது என வினோத் வேதனை தெரிவித்தார்.