தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லையா? அழையுங்கள் 14417 - அழையுங்கள் 14417 என்ற உதவி எண்

கடந்த 6 மாதங்களில் பள்ளிக்கல்வித்துறையின் மாணவர்களுக்கான புகார் மற்றும் உதவி எண் 14417-க்கு வந்த அழைப்புகளின் வாயிலாக 3 குழந்தைத்திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதோடு, மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 52 பாலியல் புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன.

அழையுங்கள் 14417
அழையுங்கள் 14417

By

Published : May 13, 2022, 6:31 PM IST

தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களாகப் பல இடங்களில் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொடர்பான அத்துமீறல்கள் எவை என்பதைப் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நாடகங்கள், விழிப்புணர்வு கூட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு அறிவுறுத்திவருகிறது.

இந்த நிலையில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு Good Touch, Bad Touch குறித்தும், பாலியல் தொந்தரவு, வேறுவிதமான தொந்தரவுகள் ஏற்பட்டால் அவர்கள் பள்ளி ஆசிரியர் தலைமை ஆசிரியர், மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்கும் வகையில் பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு: இதனைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை மாணவ-மாணவிகளின் புத்தக அட்டைகளில் "நிமிர்ந்து நில், துணிந்து சொல்" என்ற வாசகம் அடங்கிய துண்டுச்சீட்டு, அனைத்து பாடப்புத்தகங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, புகார் எண்களும் சீல் வைக்கப்பட்டு வழங்கப்பட்டது. ரப்பா் ஸ்டாம்பு சீலில் குழந்தைகள் உதவி என்பது 1098, அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் உதவி எண் 1077 மற்றும் கல்வி வழிகாட்டி மையம் 14417 உள்ளிட்ட தொலைபேசி எண்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

12ஆம் வகுப்பு படித்த 3 மாணவிகளின் திருமணங்கள் தடுப்பு: அதன்படி, கடந்த 6 மாதங்களில் பள்ளிக்கல்வித்துறையின் மாணவர்களுக்கான புகார் மற்றும் உதவி எண் 14417-க்கு வந்த அழைப்புகள் மூலம் 3 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 52 பாலியல் புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன. மேலும் பள்ளியில் படிக்கும்பொழுதே, திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த மூன்று மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.

அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆசிரியரின் தொல்லை: கடந்த 2018ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான உதவி எண் 14417 அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த திட்டம் தொடர்பான சந்தேகங்கள், தகவல்கள், மனநல ஆலோசனை உள்ளிட்ட உதவிகளை 14417 எண்ணிற்கு தொடர்பு கொள்வதன் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். மேலும், இந்த எண் குறித்த விழிப்புணர்வு 2018ஆம் ஆண்டு முதல் சற்று குறைவாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடையே பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக எழுந்த நிலையில், இதன் பயன்பாடு பரவலாகியது.

மாணவர்களிடையே அதிகரிக்கும் விழிப்புணர்வு: இதனையடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அதிகம் பெறப்பட்டன. எனவே, பள்ளி வளாகங்களில் நடைபெறும் பாலியல் புகார்கள் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் 14417 எண்ணிற்குப் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் பள்ளி வளாகங்களில் எழுதப்பட்டன. அவ்வாறு புத்தகங்களில் புகார் எண்ணை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் முத்திரையிட்டதனால் கடந்த 6 மாதங்களில் 14417 எண் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.

புகார் எண்ணுக்கு வந்த 52 அழைப்புகளும் அதற்கான விரைவு தீர்வுகளும்: இது குறித்து பள்ளிக்கல்வித்துறை உதவி எண் 14417 ஒருங்கிணைப்பு அலுவலர் பவுல் ராபின்சன் கூறும்போது, 'கடந்த 6 மாதங்களில் கள்ளக்குறிச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு படித்து வந்த 3 மாணவிகளுக்கு நடைபெற இருந்த குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

அதேபோல, 52 பாலியல் புகார்களும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு காவல்துறை மூலம் உரிய தீர்வுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வித்துறை உதவி எண் 14417 ஒருங்கிணைப்பு அலுவலர் பவுல் ராபின்சன் பேட்டி

மாணவிகளுக்கானப் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து காவல் துறையினர் தொடர்பு கொண்டவுடன் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு விரைந்து தீர்வு வழங்குகின்றனர். பெரும்பாலும், மாணவிகளைப் பின்தொடர்ந்து வருதல் போன்ற குற்றச்சாட்டுகளைப் பள்ளி ஆசிரியர்கள் மூலமே தீர்வு காண்கிறோம்.

மேலும், 14417 உதவி எண்ணுக்கு பாலியல் குற்றச்சாட்டுகள் தவிர்த்து மாணவர்கள் உயர்கல்வி, அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் சார்ந்து பல்வேறு தரப்பினர் தகவல்களைக் கேட்கும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வதற்கு அதிக அளவில் பெற்றோர்கள் தொடர்பு கொள்கின்றனர்‌' எனக் கூறினார்.


இதையும் படிங்க:'மாணவர்களை மையப்படுத்துங்க; பாலியல் பிரச்சினைகள் குறையும்'

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details